குருசினில் தொங்கிய குருதியும் குருசினில் தொங்கிய குருதியும் வடிய, கொல்கதா மலைதனிலே - நம் குருவேசு சுவாமி கொடுந் துயர், பாவி, கொள்ளாய் கண் கொண்டு. 1. சிரசினில் முண்முடி உறுத்திட, அறைந்தே சிலுவையில் சேர்த்தையோ! – தீயர் திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார், சேனைத்திரள் சூழ. 2. பாதகர் நடுவில் பாவியினேசன் பாதகன் போல் தொங்க, யூத பாதகர் பரிகாசங்கள் பண்ணிப் படுத்திய கொடுமைதயை. 3. சந்திர சூரிய சகல வான் சேனைகள் சகியாமல், நாணுதையோ! – தேவ சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால் துடிக்கா நெஞ்சுண்டே? 4. ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த இறைவன் விலாவதிலே, - அவர் தீட்டிய தீட்சைக் குருதியும் ஜலமும் திறந்தூற்றோடுது, பார் 5. எருசலே மாதே, மறுகி நீயழுது ஏங்கிப் புலம்பலையோ? – நின் எருசலையதிபன் இள மணவாளன் எடுத்த கோல மிதோ? குருசினில் தொங்கிய குருதியும் வடிய, கொல்கதா மலைதனிலே - நம் குருவேசு சுவாமி கொடுந் துயர், பாவி, கொள்ளாய் கண் கொண்டு.